April 10, 2026 in இலக்கியம்5 minutes
வாழும் தமிழ் நியூ யார்க் இலக்கிய விழா - 2026
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் ஒன்றுகூடுவது வழமையான நிகழ்வுதான். இவற்றில் பெரும்பாலானவை வெகுஜன கேளிக்கைகளாகத்தான் இருக்கும். இலக்கியம், வாசிப்பு குறித்தவை பெரிதும் குறுங்குழுச் செயற்பாடுகளே. அதிகபட்சம் ஐம்பது பேர் ஒன்றிரண்டு மணி நேரத்திற்கு ஒன்றுகூடி, உரையாடிக் கலைந்து செல்வார்கள். இந்த வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக அமெரிக்காவின் நியூ யார்க் மாநகரில் கடந்த வாரம் (ஏப்பிரில் 3, 4-ஆம் திகதிகளில்) வாழும் தமிழ் இலக்கிய விழா என்ற மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ந்தேறியது. அமெரிக்க விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இந்நிகழ்வினை ஒருங்கமைத்திருந்தது. இரண்டு நாட்களும் நியூ யார்க்கில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆங்கிலப் பதிப்பாசிரியர்கள், வாசகர்கள் எனக் கிட்டத்தட்ட முன்னூறுபேர் கலந்துகொண்டார்கள். இந்தியா, மலேசியா, ஐக்கியக் குடியரசு, சுவிட்ஸர்லாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் நிகழ்வுகளில் பங்கேற்றார்கள். விழா நியூ யார்க் நடுகரில் இருக்கும் New York Academy of Medicine Library என்ற பழம்பெருமை வாய்ந்த கட்டடத்தின் மூன்று தளங்களில் நிகழ்ந்தது. வருகை தந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலமான நியூ ஜெர்ஸியின் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் நிகழ்வரங்கிற்குச் சில பேருந்துகள் மூலம் அழைத்துவரப்பட்டார்கள்.
நிகழ்வுகள் ஏப்பிரில் மூன்றாம் நாளன்று சரியாகப் பத்து மணிக்குத் துவங்கின. துவக்க அரங்கில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஆங்கில எழுத்தாளர்கள் டேமியன் ஸியர்ல்ஸ், பத்மா விஸ்வநாதன் ஆகியோர், விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்டின் சௌந்தர், பழனிஜோதி ஆகியோருடன் பங்கேற்றார்கள். இதில் விழாவின் நோக்கம், அடுத்த இரண்டு நாட்களுக்கான நிகழ்திட்டம் போன்றவை விளக்கப்பட்டன. இதன் பிறகு, எல்லா அமர்வுகளும் இரண்டு தடங்களாகப் பிரிந்து ஒரே சமயத்தில் இருவேறு அரங்கங்களில் நடைபெற்றன. பல்வேறு அமர்வுகளுக்கான அரங்குகள் தமிழின் மாபெரும் முன்னோடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், கா.நா.சுப்பிரமணியம், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் பெயர்களையும் திருவுருக்களையும் தாங்கி அமைக்கப்பட்டிருந்தன.

நவீன இலக்கியக்கியமும் கலாச்சாரமும், காலங்கடந்து நிலவும் மனிதநேயம், செவ்வியலின் மறுவருகை, கவிதையில் ஓசை, எதிர்வினை மற்றும் மீள்கண்டடைதல், கவிதைகள் -நேற்றும் இன்றும், பெண்ணிய நோக்கு, நவீன இலக்கியத்தில் அடையாளத் தேடல் போன்ற காத்திரமான தலைப்புகளில் குழு உரையாடல்களாக இரண்டு நாள் நிகழ்வுகளும் நடந்தன. ஒவ்வொரு விவாதக் குழுவும் இரண்டு அல்லது மூன்று தமிழ் எழுத்தாளர்களையும், ஒரு ஆங்கிலப் படைப்பாளியையும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதில் முக்கியமான விடயம், இந்தக் குழு உரையாடல்களை ஒழுங்கமைத்தவர்கள் அமெரிக்கா, கனடா நாடுகளிலேயே வளர்ந்த அடுத்த தலைமுறை இளையோர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் விவாதக் குழுவில் இருக்கும் படைப்பாளிகளை முன்னரே வாசித்து, தங்கள் குடும்பத்த்தினரோடும் நண்பர்களோடும் விவாதித்துப் படைப்பாளிகளையும் படைப்புகளையும் குறித்த நல்ல புரிதல்களோடு, முழுத் தயாரிப்புடன் வந்திருந்தார்கள். அந்த வயதுக்கேயுரிய சரியான விகிதத்திலான உற்சாகமும், ஆர்வமும், தன்னம்பிக்கையும், நகைச்சுவையும் அவர்கள் நெறியாள்கையில் வெளிப்பட்டது. நிகழ்வுகளில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழ் எழுத்தாளர்களும் இயன்றவரை ஆங்கிலத்திலேயே உரையாடப் பணிக்கப்பட்டார்கள். இயல்பாகவும் தன்னிச்சையாகவும் உரையாட வேண்டும் என்பதால் சில எழுத்தாளர்கள் தமிழிலேயே உரையாட, அவற்றை நெறியாளுநர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள். உரையாடல்கள் செறிவாகவும் நிறைவாகவும் அமைந்திருந்தன.
தமிழில், எழுத்தாளர்கள் ஜெயமோகன். யுவன் சந்திரசேகர், பாவண்ணன், சு. வேணுகோபால், காலம் செல்வம், அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ், சயந்தன், கிரிதரன் ராஜகோபாலன், சுனில் கிருஷ்ணன், திருச்செந்தாழை, அஜிதன், ம.நவீன், செந்தில் ஜகன்நாதன், சி. சரவணகார்த்திகேயன், லக்ஷ்மி சரவணகுமார், அரவின்குமார், ரம்யா, கலைச்செல்வி, அழகுநிலா, தமிழ் பிரபா, செந்தில்குமார், சாம்ராஜ்; கவிஞர்கள் பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில்; மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் கல்யாணராமன், சுசித்ரா ராமச்சந்திரன், பிரியம்வதா ராம்குமார், ஜெகதீஷ் குமார், ஐஸ்வர்யா, ரெமிதா சதீஷ், ஆகியோர் உரையாடல்களில் பங்களித்தார்கள். ஆங்கில எழுத்துலகிலிருந்து டேமியன் ஸியர்ல்ஸ், பத்மா விஸ்வநாதன், ஜனிகா ஓஸா, பீட்டர் கான்ஸ்டண்டைன், எஸ்தர் அலன், கரிம் ஜேம்ஸ் அபு-ஸையத், விவேக் நாராயணன், ஜெரால்டின் ஜென்கின்ஸ், சாட் போஸ்ட், ஜெஃப்ரி ப்ராக், என எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்காற்றிய அனைவருமே முழுத் தயாரிப்புடன் வந்திருந்தார்கள். மிகுந்த உற்சாகத்துடன் கலந்துரையாடல்களில் பங்கேற்றார்கள். இரண்டு நாட்களும் இலக்கியத்தைத் தவிர வேறெந்த பேச்சுக்கும் அங்கே இடமில்லை.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான விசாக்களைப் பெற்றுத்தர, அவர்கள் பயணங்களையும் தங்கும் இடங்களையும் ஒழுங்கமைக்க அமெரிக்காவிலிருந்து மகேஷ்வரி தலைமையில் ஒரு தொண்டர் குழுவினர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக, இரவுபகலாக அயராது உழைத்தார்கள். இன்னும் சில இந்திய எழுத்தாளர்களுக்கு அமெரிக்க அனுமதிச்சீட்டு மறுக்கப்பட்டதால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. நடந்துவரும் வளைகுடா போரின் காரணமாக பல இந்திய எழுத்தாளர்களுக்குத் துபாய், கத்தார் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட பயணங்கள் கடைசி சில நாட்களில் ஐரோப்பா, ஹாங்காங் வழியாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்களின் அயராத உழைப்பினாலும் பண உதவியினாலும் மாத்திரமே சாத்தியப்பட்டிருக்கிறது. பெரும் நிறுவனங்களின் உதவியில்லாமல் முற்றிலும் தன்னார்வலர்களால் இப்படியொரு மாபெரும் நிகழ்வைத் துல்லியமான திட்டமிடலுடன் சாத்தியமாக்கியது அபார சாதனை என்றே சொல்ல வேண்டும்.
அமெரிக்காவில் ஏன் தமிழ் இலக்கியத்திற்கு விழா எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதில் ஓரளவு நியாயம்கூட இருக்கிறது. இந்தியாவிலிருந்து முப்பது எழுத்தாளர்களை அமெரிக்கா அழைத்துவர அதிகச் செலவாகிறது. இந்தத் தொகையைக்கொண்டு இந்தியாவிலேயே இன்னும் பெரிய விழாவை நடத்துவது சாத்தியம்தான். ஆனால், விழாவுக்கான நோக்கத்தை வரையறுக்கையில் எழுத்தாளர் ஜெயமோகன், “இது தமிழ் எழுத்தை உலக அரங்குக்குக்கு எடுத்துச் செல்லும் விழா. எனவே அவர்கள் இருக்கும் இடத்துக்கு நாம் சென்று, அவர்கள் மொழியிலேயே நம் உயரிய தற்காலத் தமிழ் இலக்கியத்தை முன்வைக்கிறோம்” என்று சொன்னார். நவீன இலக்கிய உலகின் மையம் நியூ யார்க் மாநகரம். இங்குதான் பெரும்படைப்புகள் அடையாளம் காணப்பட்டு கவனப்படுத்தப்படுகின்றன. இங்கு முன்னிடம் பெறும் ஆக்கங்கள் உலகின் எல்லா மூலைகளையும் சென்றடைகின்றன என்றார். சமகால தமிழ்ப் படைப்புகள் கலைத்திறனால் புகழடையும் உலகின் வேறெந்த மொழி ஆக்கங்களுக்கும் ஈடானவை. உலகத்தின் கவனத்தைப் பெற அதிக எண்ணிக்கையில் படைப்புகள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உயர்தர மொழியாக்கங்களாலும், பிற மொழிப் படைபாளிகளுடன் தொடர் உரையாடல்களாலும் மாத்திரமே தமிழுக்கு உரிய உயரிய இடத்தை நாம் பெற்றெடுக்க முடியும்.
நிகழ்வுகளுக்கு அப்பால் தொடர்ச்சியான உரையாடலைச் சாத்தியப்படுத்த விழாவில் பங்குபெற்ற தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களின் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இவற்றில் மூத்த படைப்பாளிகளின் கதைகள் Born with the Southern Wind என்ற நூலாகவும், இளம் படைப்பாளிகளின் கதைகள் The Sound of the Eastern Waves என்ற தலைப்பிலும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல கதைகளை அமெரிக்காவில் பிறந்த இளையதலைமுறை தங்கள் பெற்றோர் உதவியுடன் மொழியாக்கம் செய்துள்ளது, இது ஒருவகையில் தமிழ் நவீன இலக்கியத்திற்கே ஒரு பெரும் தொடக்கம். இந்நிகழ்வின் பொருட்டு ஜெகதீஷ்குமார் இந்த மொழியாக்க நூல்களைத் தொகுத்திருக்கிறார்.
நான் வேலை காரணமாக ஆசிய, ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் வசித்திருக்கிறேன். பல்வேறு நாடுகளில், பல தமிழ் (மற்றும் இந்திய) கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறேன் ஏற்கனவே சொன்னதுபோல் இவற்றில் பெரும்பாலானவை கேளிக்கை நிமித்தமானவை. பலரும் நாடுவிட்டுப் புலம்பெயர்ந்து அயராது உழைக்கையில் எங்கள் இனத்தவருடன் களித்திருக்கத்தானே இந்த நிகழ்வுகள் என்றே சொல்வார்கள். ஆனால் இவற்றின் அடிநாதமாக இருப்பது நமக்கான அடையாளத்தைத் தக்கவைத்தல். புலம்பெயர்ந்தவர்கள் பலருக்கும் தம் இன அடையாளத்தையும் அதைச் சார்ந்த பெருமைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். தம் அடுத்த தலைமுறையிடம் அவற்றைக் கையளிக்க வேண்டும், அவர்கள் அதைத் தொடரவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஒருவகையில் கேளிக்கை நிகழ்வுகள் இளந்தலைமுறையைத் தாம் விரும்பும் இடத்துக்கு அழைத்துவரும் உத்திகள்தாம். ஆனால் உண்மையில் நடப்பது அந்நிகழ்வுகள் பங்கேற்பவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து தம் இனத்தவரிடையே தாம் சாதித்தவற்றையும், தம் சமூக அந்தஸ்தையும் பறைசாற்றுவதாகவோ அல்லது நனவிடை தோயும் உரையாடல்களாகவோ மாத்திரமே தேங்கிப்போகிறார்கள். இவர்கள் இப்படிப் பெருமிதங்களிலும் கனவுகளில் திளைக்க, இளந்தலைமுறைகள் ஒரு ஓரமாக ஒதுங்கி டிரேக், பியான்ஸே பாடல்களுக்கு ஆடிக்கொண்டு, உள்ளூர் ஹாக்கி, கால்பந்து உரையாடல்களுடன் தம்மீது திணிக்கப்படும் அடையாளத்தை முற்றாக எதிர்ப்பார்கள். இதற்கு முற்றிலும் மாறாக நியூ யார்க் இலக்கிய நிகழ்வின் இரண்டு நாட்களும் இளையவர்கள் தமிழ் அரங்குகளை முன்னின்று நடத்துவதும் தம்மில் முதியோரின் உரையாடல்களை நெறியாள்கை செய்வதுமாக முற்றாக ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். என்னைப் பொருத்தவரை இதுவே இந்நிகழ்வின் மாபெரும் சாதனை என்பேன்.
இந்நிகழ்வின் மூலம் நவீன தமிழ் இலக்கியம் ஒரு பெரும் தடையைத் தகர்த்திருக்கிறது. காலங்காலமாக தமக்குள்ளே உரையாடிக்கொண்டிருந்த தமிழ்ப் படைப்பாளிகள் இப்பொழுது உலக இலக்கியத்தை நோக்கி ஒரு தீர்மானமான முன்னகர்வை நிகழ்த்தியிருக்கிறார்கள். தரமான மொழிபெயர்ப்புகள், தன்னம்பிக்கை கொண்ட உரையாடல்கள், உதவிக்குப் புலம்பெயர்ந்த வாசகர்கள், அந்நிய கலாச்சாரத்துக்கும் தமிழுக்குமான வலுவான பாலமாக வளரும் இளந்தலைமுறை எனப் பலவாராக இது ஒரு முன்னோடி நிகழ்வு. வருங்காலத்தில் இது தமிழையும் தமிழ்ப்படைப்பாளிகளையும் புது உச்சங்களுக்குக் கொண்டுசெல்லும் என்று நிச்சயம் நம்பலாம். அதன் அடுத்த கட்டமாக இரண்டாவது வாழும் தமிழ் நிகழ்வு செப்டம்பர் 2027-ல் ஐரோப்பாவின் இலண்டன் மாநகரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வந்த படைப்பாளிகளும் பார்வையாளர்களும் இலண்டனை ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கிவிட்டார்கள்.