Jikki

ஆகஸ்டு 16, 2004 அன்று பிரபல திரையிசைப் பாடகி ஜிக்கி மரணமடைந்தார். அவருக்கு வயது 70. தமிழ், தெலுகு உள்ளிட்ட பல மொழிகளில் மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர் திருமதி ஜிக்கி. மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜிக்கியின் மறைவு ஒருவகையில் அவருக்கு அமைதியைத் தந்திருக்கிறது.

ஜிக்கி என்கிற பி.ஜி. கிருஷ்ணவேணி 1943 ஆம் ஆண்டு தெலுகில் ‘பந்துலம்மா’ திரைப்படத்தில் நடிகையாகவும் பிண்ணனிப்பாடகியாகவும் அறிமுகமாகி 2002 ஆம் ஆண்டுவரை - கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையிசையில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் அவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது அவருடைய தனித்தன்மையையும் திறமையையும் காட்டுகிறது. தேவா, மணி சர்மா, உள்ளிட்ட சமீபத்திய இசையமைப்பாளர்கள்கூட அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். சில பாடல்களை வேறு யாரும் பாடியிருக்க முடியாது என்று தோன்றும், அந்த வகையில் ஜிக்கி பாடிய பல பாடல்களை வேறு யாராலும் அந்தத் தனித்தன்மை வாய்ந்த குரலுக்கு அருகில் கூட நெருங்கியிருக்க முடியாது.

  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ (குலேபகாவலி)
  • துள்ளாத மனமும் துள்ளும் (கல்யாணப் பரிசு)
  • வாடிக்கை மறந்ததும் ஏனொ (கல்யாணப் பரிசு)
  • செந்தாமரையே செந்தேனிலவே (புகுந்த வீடு)
  • வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப்பாட்டு)
  • ஜிகு ஜிகு ஜிகு ஜியாலங்கடி (காத்தவராயன்)
  • நான் உன்ன நெனச்சேன் (கண்ணில் தெரியும் கதைகள்)

உள்ளிட்ட பல அற்புதமான பாடல்களைப் பாடிவர் ஜிக்கி. அவருடைய கணவர் திரு ஏ.எம்.ராஜாவும் அவரும் இணைந்து பாடிய பல பாடல்கள் காலமெல்லாம் கேட்டு இரசிக்கத் தக்கவை. (ஏ.எம்.ராஜா 1989ஆம் ஆண்டு ஒரு அசம்பாவிதத்தில் இரயில் நிலையத்தில் மரணமடைந்தார்).

தென்னிந்தியத் திரையுலகம் ஒரு வரலாறு படைத்த இனிய பாடகியை இழந்திருக்கிறது.

அவருடைய நினைவஞ்சலியாக நம் தமிழ் நண்பர்களுக்கு அதிகம் தெரியாத, என்னை மிகவும் கவர்ந்த அவருடைய தெலுகு திரைப்படப் பாடல் ஒன்று;

Music

  • திரைப்படம்: ஆதித்யா 369,
  • வருடம்: 1991
  • பாடியவர்கள்: ஜிக்கி, எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி ஷைலஜா
  • இசை: இளையராஜா

முதலில் பதிப்பிக்கப்பட்டது: 19 ஆகஸ்டு 2004